ஐதராபாத்: ஆன்லைன் பெட்டிங் செயலிகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த புகாரில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி நிர்வாக இயக்குனர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் செயலிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக ஒன்றிய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பினோ பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரிஷி குப்தாவை ஐதராபாத் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
வேகோபின் டிஜிட்டல் மற்றும் பிஎஸ்ராவ் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் பணம் கைமாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 7.5 சதவீதம் சரிந்து 192.45 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. சுமார் 13,000 கோடி ரூபாய் அளவிலான ஆன்லைன் பெட்டிங் மோசடி வலைப்பின்னலில், 3,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்ட அவர், நெஞ்சுவலி காரணமாக ஜே.ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிர்வாக பிரச்னை குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விசாரணை எங்கள் வணிக கூட்டாளர்கள் தொடர்பானது; வங்கியின் நேரடி வரி செலுத்துதலில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலைமையை சமாளிக்க நிதி அதிகாரி கேதன் மெர்ச்சன்ட் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
