பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த மாணவி தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் டிக்சன் என்பவர் அறிமுகமானார். இவர்கள் அடிக்கடி கோரமங்களாவில் உள்ள ஓட்டலில் சந்தித்துள்ளனர். இதையடுத்து டிக்சன் அந்த மாணவியை பிப்.14ம் தேதி அம்ருதஹள்ளியில் உள்ள வில்லா சொகுசு பங்களாவுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார். அதை நம்பி மாணவி அவருடன் சென்றார். அங்கு அவர்கள் சென்ற போது டிக்சனின் நண்பர் நிகில்(30) ஏற்கனவே அங்கு இருந்துள்ளார்.
அங்கு சென்ற மாணவிக்கு வலுக்கட்டாயமாக மயக்க மருந்துகொடுத்து இருவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து வெளியே சொன்னால் சமூக வலைதளத்தில் வீடியோவை பதிவேற்றம் செய்வோம் என்று கொலை மிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளனர். ஆனாலும் திருப்பூரை சேர்ந்த மாணவி தைரியமாக போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரை தொடர்ந்து போலீசார் டிக்சன், நிகில் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
அம்ருதஹள்ளியில் இவர்கள் வாடகைக்கு எடுத்த வில்லா பெங்களூருவை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு சொந்தமானது. டிக்சன், நிகில் இருவரும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பெங்களூருவில் தங்கி படிக்கும் பெண்களை குறிவைத்து இன்ஸ்டாகிராமில் பழகுவார்கள். பின்னர் நேரில் சந்தித்து மிகவும் நல்லவர்களாகவும், வசதி படைத்தவர்கள் போலவும் காட்டிக்கொள்வார்கள். பழைய காரை வாங்கி விற்கும் பணி செய்து வருவதால் தினமும் ஒரு காரில் பயன்படுத்தி மாணவிகளை தங்கள் வலையில் சிக்க வைத்து விடுவார்கள்.
பின்னர் பார்ட்டி என்ற பெயரில் அம்ருதஹள்ளியில் உள்ள அவர்களது வில்லாவுக்கு அழைத்து சென்று போதை மருந்து கொடுப்பார்கள். அவர்கள் போதையில் இருக்கும் போது உல்லாசமாக இருக்க அழைப்பார்கள். சம்மதிக்கும் பெண்களுடன் இருவரும் உல்லாசமாக இருந்து வீடியோவும் எடுத்துவைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவார்கள். சம்மதிக்காத பெண்களுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்து உல்லாசமாக இருப்பார்கள் .அது போல் தான் தமிழக மாணவி அவர்களிடம் சிக்கியுள்ளார். தமிழக மாணவி போலீசில் அளித்த புகாருக்கு பிறகு மேலும் பாதிக்கப்பட்ட 19 மாணவிகள் டிக்சன், நிகில் மீது புகார் அளித்துள்ளனர். தமிழக மாணவி தனது புகாரில், நான் இருந்த வில்லாவில் நிறைய பெண்கள் இருந்தார்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
