கொழும்பு: உலகக் கோப்பை டி 20 சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தலாக வெற்றி பெற்றது. உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டி இலங்கையில் நேற்று நடந்தது. அதில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய நியூசிலாந்தின் ஃபின் ஆலன் 23, டிம் செபெர்ட் 8 ரன்னில் வீழ்ந்து மோசமான துவக்கத்தை தந்தனர். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ், துஷ்மந்த சமீரா பந்தில் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, 12வது ஓவரில் மஹீஸ் தீக்சனா வீசிய மந்திரப் பந்தை ரச்சின் ரவீந்திரா (32 ரன்) தட்டி விட, அதை தீக்சனாவே பாய்ந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
அடுத்த 2வது பந்தில் மார்க் சாப்மேன் ரன் எடுக்காமல் தீக்சனாவிடம் வீழ்ந்தார். 13வது ஓவரில் துனித் வெல்லலகே வீசிய பந்துக்கு டேரில் மிட்செல் (3 ரன்) இரையானார். இருப்பினும் கடைசி 3 ஓவர்களில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் (26 பந்து, 47 ரன்), கோல் மெகோன்சி (23 பந்து, 31 ரன்) இணை சேர்ந்து, இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்து ரன்கள் குவித்தனர். அதனால், 20 ஓவரில் நியூசி. 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. இலங்கை தரப்பில் தீக்சனா, துஷ்மந்த சமீரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 169 ரன் இலக்கை துரத்திய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 31 ரன், துனித் 29 ரன் எடுத்தனர். நியூசி அணி பந்து வீச்சில் ரச்சின் ரவிந்த்ரா 4 விக்கெட், மேட் ஹென்ட்ரி 2 விக்கெட், சாண்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
