‘ஏஐ’ அமைச்சராக தனது முகத்தை பயன்படுத்தியதால் அரசிடம் இழப்பீடு கேட்டு நடிகை முறையீடு: அல்பேனியா நாட்டில் பரபரப்பு

 

டிரானா: தனது உருவத்தை முறைகேடாக பயன்படுத்தி ‘ஏஐ’ அரசு அமைச்சராக மாற்றியதற்கு எதிராக அல்பேனியா நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். அல்பேனியா நாட்டின் புகழ்பெற்ற நடிகையான அனிலா பிஷா, கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் அரசு இணையதளத்தில் உதவி சேவை வழங்குவதற்காக தனது முகம் மற்றும் குரலை பயன்படுத்த ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த ஒப்பந்தம் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதற்கிடையில், செப்டம்பர் 2025ம் ஆண்டில் அந்த நாட்டு பிரதமர் எடி ராமா, அனிலா பிஷாவின் டிஜிட்டல் உருவத்தை ‘டியெல்லா’ என்ற பெயரில் நாட்டின் பொது கொள்முதல் துறை ‘ஏஐ’ அமைச்சராக அறிவித்தார்.

தனது அனுமதி இன்றி தனது உருவம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதையும், அமைச்சரவை இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, இது தனது அடையாளத்தை திருடும் செயல் என குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக அனிலா பிஷா தற்போது சட்டப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய டிரானா நீதிமன்றம், வழக்கு முடியும் வரை அந்த உருவத்தை பயன்படுத்த தடை விதிக்க முடியாது என நடிகையின் கோரிக்கையை நிராகரித்தது.

தொடர்ந்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக சுமார் 1 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 10.73 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: