டெல் அவிவ்: தீவிரவாதம் அமைதியை கெடுக்கிறது, அதை நியாயப்படுத்த முடியாது என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் புறப்பட்டு சென்றார். 9 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை, டெல் அவிவ் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டி அணைத்து உற்சாகமாக வரவேற்றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்களையும் ராணுவ பேண்ட் குழுவினர் இசைத்தனர். பின்னர், நாடாளுமன்றத்துக்கு இருவரும் சென்றனர். அப்போது, பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், ‘இஸ்ரேலின் சிறந்த நட்பு நாடு இந்தியா. இந்தியாவும் இஸ்ரேலும் சகோதர நாடுகள். பிரதமர் மோடி இஸ்ரேல் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளும் தங்கள் உறவை வலுப்படுத்தி வருகின்றன. மோடியை கட்டிப்பிடித்து வரவேற்பது உண்மையிலேயே மிக சிறப்பானது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒத்துழைப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. புரிதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ளார். இரு நாடுகளும் பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. யூதர்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்தியா சக்திவாய்ந்த நாடு’ என்றார். இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘கெனெசட்டில்’ பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது. அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உங்கள் வேதனையை உணர்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலும், இஸ்ரேலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலும் ஒன்றுதான். பொதுமக்களை கொல்வதை நியாப்படுத்த முடியாது. தீவிரவாதம் அமைதியை கெடுக்கிறது. சமூகத்தை அழிப்பதுதான் தீவிரவாதத்தின் நோக்கம். தீவிரவாதத்தில் இரட்டை நிலை இருக்க முடியாது. தீவிரவாத விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. நிலையான அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது.
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளது. அமைதிக்கான பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா வலியுறுத்துகிறது. இந்தியாவில் யூதர்கள் அச்சமின்றி வசிக்கின்றனர். யூதர்களின் தாய்நாடாக இந்தியா உள்ளது. நமது உறவு ரத்தம் மற்றும் தியாகத்தால் எழுதப்பட்டுள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும், இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதர்ஸன சக்கரம்’ ஆயுத தயாரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கருவியான அயர்ன்டோம் ஏவுகணை தொழில்நுட்பத்தை அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து தற்போது அரசு முறைப் பயணம் சென்றுள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அர்ஜென்டினா அதிபர் ஜாவீர் மிலே உட்பட சிலர் மட்டுமே உரை நிகழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய அரசியல் தலைவர் பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அங்குள்ள இந்தியர்கள் ஜெருசலேமில் உள்ள கிங் டேவிட் ஓட்டலில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பின் பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவர்கள் அளித்த உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்தேன். 9 ஆண்டுகளுக்கு பின்பு இஸ்ரேல் வந்தது மகிழ்ச்சி. இரு நாடுகளும் பல துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தோம். இதன் மூலம் உறவு வலுப்பெறும். காசாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆலோசித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி
இந்தியாவுக்கும்-இஸ்ரேலுக்கும் இடையில் ஒத்துழைப்பு என்பது அந்தளவுக்கு இல்லைதான். பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன்தான் முன்னாள் பிரதமர்கள் நட்பு பாராட்டி வந்திருந்தார்கள். இப்படி இருக்கையில் இஸ்ரேலுடன் மோடி நெருக்கம் காட்டுவது, இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளின் தன்மை மாறியிருக்கிறதோ என கேள்வி எழுந்திருக்கிறது. மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் 2வது முறையாக இஸ்ரேல் சென்றிருக்கிறார். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு பயணம் செய்தபோது பாலஸ்தீன நாட்டின் கிராண்ட் காலர் விருது வழங்கப்பட்டிருந்தது.
நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான முக்கிய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி ஆற்றிய சிறந்த பணிக்காக, அவருக்கு ‘கெனெசட் சபாநாயகர் பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அமீர் ஓஹானா இந்த உயரிய விருதை வழங்கினார். கெனெசட்டின் மிக உயர்ந்த கௌரவமான இந்த பதக்கத்தை பெறும் முதல் உலக தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த மோடியின் தனிப்பட்ட தலைமையையும், அசாதாரண பங்களிப்பையும் இந்த விருது போற்றுகிறது.
உலக தலைவர்களில் மிக சிலரே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளனர். அந்த சில அரிய தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
