திண்டிவனம்: பாமகவை கைப்பற்றுவதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே தினமும் ஒரு மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், பாமக சின்னத்தை தடை செய்யக்கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த வழக்கை திரும்பபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செஞ்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அன்புமணி ஆதரவாளருமான கணேஷ்குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் சின்னத்தை தடை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பாமக நிறுவனர் ராமதாசின் கையெழுத்தை மோசடி செய்து போலி கையெழுத்து போட்டுள்ளனர் என்று வழக்கறிஞர் பாலு ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் ராமதாசின் வழக்கறிஞர் அருள் வழக்கை திரும்ப பெற்றுள்ளார். அதற்கான விசாரணை இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டு உள்ளதாகவும், தப்பித்தால் போதும் என்று ராமதாஸ் தரப்பு ஓட்டம் பிடிப்பதாக கூறியுள்ளார். மேலும் வழக்கை திரும்பப் பெறுவதற்கான ஆதாரமாக உயர் நீதிமன்ற பட்டியலையும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சமூநீதிபேரவை தலைவரும், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞருமான கோபுவிடம் கேட்டபோது, உரிமையில் நீதிமன்றத்தில் மார்ச் 9ஆம்தேதி பாமக கட்சி, கொடி, சின்னம் தொடர்பாக மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
அப்போது வேறு எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கக் கூடாது என்பதாலும், சென்னை உயர் நீதிமன்ற இந்த வழக்கை மேற்கோள் காட்டி உரிமையியல் நீதிமன்ற வழக்கை அன்புமணி தரப்பு ரத்து செய்யக் கோரலாம் என்பதால், முன்கூட்டியே வாபஸ் பெற்றோம் என்றார்.
