வேட்பாளர் தேர்வு விவகாரம்: புஸ்ஸி ஆனந்த்- ஜான் ஆரோக்கியசாமி விஜய் முன்னிலையில் குஸ்தி

 

திருச்சி: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை 2024 பிப்வரி 2ம் தேதி துவங்கினார். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி, மதுரையில் மாநாடு நடத்தினார். ெதாடர்ச்சியாக திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர், ஈரோட்டில் நடந்த பரப்புரை கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். மற்ற ஊர்களுக்கு விரைவில் செல்லவுள்ளார். இதில் கரூரில் நடந்த பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்நிலையில் தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சிகளும் முன்வரவில்லை. இதனால் 234 தொகுதிகளிலும் ேவட்பாளர்களை நிறுத்த விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தலையீடு அதிகமாக உள்ளதாக விஜய்யிடம் தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புகார் அளித்துள்ளார். இதனால் சில தினங்களுக்கு முன் பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆராக்கியசாமி ஆகியோரை அழைத்து விஜய் பஞ்சாயத்து பேசி உள்ளார். அப்போது புஸ்ஸி ஆனந்த், விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றங்களில் தலைவராக இருந்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும். நீண்ட காலமாக நம்முடன் இருந்து வருகின்றனர்.

இவர்கள் தான் நாம் சொல்வதை கேட்பாளர்கள் என்று கூறியதுடன் வேட்பாளர்களின் பட்டியலை விஜய்யிடம் வழங்கினாராம். அப்போது குறுக்கிட்ட ஜான் ஆரோக்கியசாமி, நீண்ட காலமாக இருப்பதால் சீட் வழங்க முடியாது. தொகுதிகளில் வெற்றி முகம், யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்களுக்கு தான் சீட் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறினாராம். இதை கேட்டு கொண்டிருந்த விஜய், புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை சமாதானப்படுத்த முயன்றார்.

இருந்தும் பயனில்லை. இதையடுத்து புஸ்ஸி ஆனந்து அங்கிருந்து கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், தவெகவில் புஸ்ஸி ஆனந்த் தன்னை மீறி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். விஜய்க்கு தெரியாமலேயே கட்சியில் தனக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுத்துள்ளார். தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுத்தால் தான் தவெகவில் யாரும் அசைக்க முடியாத அளவுக்கு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறார். இதை விஜய்யிடம் ஜான் ஆரோக்கியசாமி கூறி விட்டார். புஸ்ஸி ஆனந்த்துக்கு செக் வைக்கும் விதமாக அந்தந்த தொகுதியில் பிரபலமாக உள்ளவர்கள், தனக்கு வேண்டியவர்களை வேட்பாளர்களாக நிறுத்த ஜான் ஆரோக்கியசாமி முடிவு செய்துள்ளார்.

அதன்மூலம் தனக்காக ஒரு கூட்டத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடையே நீடிக்கும் அதிகார மோதலால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜய் இறங்கினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதனால் தவெகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் தேர்வு, முக்கிய முடிவுகள் எடுப்பதில் செங்கோட்டையனை யாரும் அழைப்பதே இல்லையாம். இதனால் செங்கோட்டையனும் அதிருப்தியில் உள்ளாராம் என்றார்.

Related Stories: