தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஏற்கனவே ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் இணைந்த நிலையில் தற்போது ஓ.பி.எஸ். திமுகவில் இணைந்தார். அவருடன் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன், ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். துணை முதல்வர், நிதி அமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.

1996ல் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பன்னீர்செல்வம் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தர்மயுத்தம் நடத்திய நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செலவம், கட்சி இணைய வேண்டும் எனக் கூறிவந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக இயங்கி வந்தார். தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு அமைத்து தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் தொகுதியில் பாஜக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அண்மைக்காலமாக திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஓ.பி.எஸ்.க்கு கட்சி உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் வருகை திமுகவுக்கு மேலும் பலம் சேர்க்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: