திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது : மு. வீரபாண்டியன் பேட்டி

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலும் திமுக கூட்டணி தேர்தல் பணிகளில் தீயாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக, மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கடந்த வாரம் தொடங்கியது. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மதிமுகாவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

இந்நிலையில் இன்று சென்னை அறிவாலயத்தில், திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையிலான 4 பேர் குழுவுடன் திமுக குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு .வீர பாண்டியன், “திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சு நிறைவடைந்தது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பாசிச வகுப்புவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்பது தான் திமுக கூட்டணியின் முதன்மையான நோக்கம். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை வீழ்த்தது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். தி.மு.கவுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்,”இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: