திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு

திருப்பூர், பிப். 9: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி கிளை சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். பேரூராட்சி நிர்வாகத்திடமும், குடிநீர் இணைப்புக்கோரி பலமுறை மனு அளித்திருந்தோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 500 முறைகேடான இணைப்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏராளமான முறைகேடு இணைப்புகள் கண்டறிவதில், தாமதம் ஏற்படுகிறது. முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அதேசமயம் முறையான குடிநீர் இணைப்புக்கும் காத்திருப்போருக்கு உரிய இணைப்பை வழங்க வேண்டும்.திருப்பூர் பாரப்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக எங்கள் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. இதற்காக வருவாய் அலுவலர் தலைமையில் கடந்த டிச.29-ம் தேதி விசாரணை நடந்தது.

அதில் இழப்பீட்டுத் தொகையாக சதுர மீட்டருக்கு ரூ. 673 முதல் ரூ.6696 என இடத்திற்கு ஏற்றார் போல் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது தொடர்பாக ஏற்கனவே நடந்த கூட்டத்தில் சதுரமீட்டருக்கு ரூ. 3455 அறிவித்திருந்தனர். ஆனால் அந்த இழப்பீட்டுத் தொகைக்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது வெவ்வேறு விதமாக இழப்பீட்டுத்தொகை அறிவித்திருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாகிவுள்ளது. எங்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிய பின்னரே, எங்களது ஆவணங்களை சமர்பிப்போம். இது எங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அரசு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.பாரதிய ஜனதா கட்சி சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர்,  உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் சுமார் 60 ஏழைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அனைவரும் விவசாயக் கூலிகள். அன்றாட வாழ்வாதாரத்துக்கே மிகுந்த சிரமப்படும் சூழலில் உள்ளனர். ஆகவே ஏழைக் குடும்பங்களின் வறுமை நிலை கருதி, நில உச்சவரம்பு சட்டத்தில்  குடியிருக்க இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

Related Stories: