9,11 ம் வகுப்புக்கான பள்ளி, கல்லூரிகள் துவங்கின

ஈரோடு, பிப். 9: ஈரோடு மாவட்டத்தில் 9,11ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் நேற்று முதல் துவங்கப்பட்டது. இதனால், மாணவ-மாணவிகள் தங்களது பள்ளி, கல்லூரிக்கு முகக்கவசம் அணிந்தபடி உற்சாகமாக சென்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுக்குள் வந்ததையொட்டி, 2ம் கட்டமாக 9,11ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், கல்லூரிகளும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து திறந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் 9,11ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் என 403 பள்ளிகளில் நேற்று முதல் வகுப்புகள் துவங்கப்பட்டது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டது. இதனால், காலை 7 மணி முதலே மாணவ-மாணவிகள் தங்களது பள்ளி, கல்லூரிக்கு முக கவசம் அணிந்தபடி உற்சாகமாக சென்றனர். இதன் காரணமாக ஈரோடு மாநகரில் 10 மாதங்களுக்கு பிறகு காலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. பள்ளி, கல்லூரியின் வளாகத்தில் மாணவ-மாணவிகள் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில், பள்ளிகளில் ஒரு வகுப்பில் 25 மாணவ-மாணவிகளை மட்டும் பங்கேற்க வைத்து பாடங்கள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: