அவரோட படத்த ஓட வச்சதே நாங்க தான்! நல்ல தலைவனுக்கு அழகு துயரத்தில் பங்கெடுப்பது ஓட்டமெடுப்பது அல்ல: விஜய்யை நறுக்..நறுக்ன்னு கொட்டிய வேலுமணி

கோவை மாவட்டம் சூலூர் அருகே சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர். ஆனால் அரசியல் என்பது வேறு. ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது நான்தான் அவரை நேரிடையாக எடப்பாடி பழனிசாமியிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன். ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், கரூர் மாநாட்டின் போது நடிகர் விஜய் சொந்தக் கட்சிக்காரர்கள் மரணம் நிகழ்ந்ததை பார்த்தும் கூட அந்த இடத்திற்கு செல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். ஒரு நல்ல தலைவன் அங்கு சென்று அதை பார்த்திருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும். சொந்த கட்சியினரையே காப்பாற்றாத இவர், மக்களை எப்படி காப்பாற்றுவார். இவ்வாறு பேசினார்.

* மீண்டும் அதிமுகவில்
செங்கோட்டையனா?
அதிமுகவிலிருந்து தவெகவிற்கு சென்றவர்கள் தற்போது அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை’ என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற பெரிய தலைவர் என்று பார்த்தால் செங்கோட்டையன் மட்டுமே. கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கியதால்தான் தவெகவுக்கு செங்கோட்டையன் சென்றார். ஆனால், அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் எஸ்.பி.வேலுமணியின் இந்த பேச்சை பார்த்தால், செங்கோட்டையன் மீண்டும் அதிமுகவுக்கு வருகிறாரா என்ற விவாதங்கள் எழுந்து உள்ளது.

* செங்ஸ் பதிலடி
கோவை கொடிசியாவில் நேற்று காலை ஒரு நிகழ்ச்சிக்கு வந்த செங்கோட்டையனிடம், அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர தயாராக இருக்கிறார்கள் என எஸ்பி வேலுமணி கூறியது பற்றி கேட்ட போது, தகவலை மறுக்காமல் நழுவி சென்றார். ஆனால், நேற்று மாலை கோபியில் நிருபர்களை சந்தித்தபோது, ‘தேர்தலில் யார் வேட்பாளர் என்று அறிவிக்கட்டும். எத்தனை பேர் எங்களை நாடி வருகிறார்கள் என பார்க்க போகிறீர்கள். மரியாதை இல்லை என்பதை அவர் சொல்லத் தேவையில்லை. எனக்கு என்ன மரியாதை கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு உதாரணம் காட்டத் தேவையில்லை. துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவரை பற்றி எனக்கு கவலை இல்லை. சசிகலா தெளிவாக சொல்லிவிட்டார்’ என்றார்.

Related Stories: