சென்னை: திமுகவுடன் இன்று காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது. காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலும் திமுக கூட்டணி தேர்தல் பணிகளில் தீயாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக, மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் பல ஆண்டு காலமாக நீடித்து வரும் காங்கிரஸ், கடந்த டிசம்பர் மாதம் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்தது. அந்த குழுவினரும் திமுக தலைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதை திமுக தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக குழு அமைக்காமல் திமுக அமைதி காத்தது. இதற்கிடையே காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு சிலர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாகவும் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சி தலைமை திமுக உடன் தான் கூட்டணி என்றும், இது தொடர்பாக கட்சியினர் பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் காங்கிரஸ் தேசிய தலைமை கொடுத்த கடிதத்தையும் முதல்வர் ஸ்டாலினிடம், கே.சி.வேணுகோபால் வழங்கி இருக்கிறார். இதை தொடர்ந்து, கனிமொழி எம்பியுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இடம்பெற்றுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், 2ம் கட்டமாக திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு பங்கேற்கிறது. இந்த குழு, திமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணி அளவில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக-காங்கிரஸ் இடையேயான இன்றைய தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தமிழக தேர்தல் களத்தில் மிக முக்கியமான நிகழ்வாக அமையவுள்ளது. அப்போது தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
* ராகுலின் தமிழக பயணம் தள்ளிப் போகிறது?
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு முன்பாக காங்கிரஸ் அரசியல் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை அல்லது திருச்சி இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எந்த இடத்தில் அரசியல் மாநாட்டை நடத்துவது, மாநாடு தேதி ஆகியவை இன்னும் முடிவாகவில்லை. ஏற்கனவே மார்ச் முதல் வாரத்தில் ராகுல் காந்தி தமிழகம் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருவதால் ராகுல்காந்தியின் வருகையை தள்ளிப் போட காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகே ராகுல் காந்தியின் தமிழகம் வருகை உறுதியாகும் என்றும் கூறப்படுகிறது.
