புதுச்சேரியில் பாமக டமார் இல்லாத கடைக்கு 3 பிராஞ்ச்: அன்புமணி காமெடி

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலால் கட்சி இரண்டாக உடைந்துவிட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் இருவரும் தனித்தனி அணியாக களமிறங்க உள்ளனர். அன்புமணி பாமகவினர் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளனர். ராமதாஸ் சில தினங்களில் தனது முடிவை அறிவிக்க உள்ளார். தமிழ்நாட்டில்தான் இந்த நிலை என்றால் புதுச்சேரியிலும் அக்கட்சி இருக்கும் இடம் தெரியாத நிலையில் நிர்வாகிகள் இடையே தேர்தல் யுத்தம் தொடங்கி விட்டது. 1996 பொதுத்தேர்தலில் ராம்சிங் (அரியாங்குப்பம்), 2006ல் ராமதாசின் நெருங்கிய உறவினரான அனந்தராமன் (அரியாங்குப்பம்), அருள்முருகன் (மண்ணாடிப்பட்டு) பாமகவில் வெற்றி பெற்றிருந்தனர். அதேபோல் 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஐ.மு. கூட்டணியில் நின்ற பேராசிரியர் மு.ராமதாஸ் (பாமக) வெற்றி பெற்றார். இவ்வாறு செல்வாக்குடன் திகழ்ந்த பாமக, 2016ல் தனித்து போட்டியிட்ட 9 ெதாகுதியிலும் டெபாசிட் இழந்தது.

2021 சட்டபேரவை தேர்தலில் எந்த கூட்டணியும் பாமகவை கண்டுகொள்ளாததால் போட்டியிடாமல் ஒதுங்கியது. கள நிலவரம் இப்பிடியிருக்க ராமதாஸ் அணியை சேர்ந்த மாநில பாமக அமைப்பாளர் கணபதி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, 3 மண்டலமாக்கி புதிய அமைப்பாளர்களை பாமக அன்புமணி திடீரென நியமித்துள்ளார். வடிவேல் (புதுச்சேரி வடக்கு), கோபி (எ) கோபாலகிருஷ்ணன் (புதுச்சேரி கிழக்கு), மதியழகன் (புதுச்சேரி மேற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில் ராமதாசால் நியமிக்கப்பட்ட தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு அதிகாரமில்லை என கணபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுவையில் தேடும் நிலையில் இருக்கும் பாமகவுக்கு 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு 3 பேர் நியமனமா எனக்கேட்டு அக்கட்சி தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

* சின்னம்மா பக்கம் தாவிய அதிமுக மாஜி
சசிகலா புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து முதற்கட்டமாக அதற்கான கொடியை அறிமுகம் செய்துள்ள நிலையில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளரும், தென்காசி தொகுதியின் முன்னாள் எம்பியுமான வசந்தி முருகேசன் அதிமுகவில் இருந்து விலகி சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியில் முதல் ஆளாக இணைந்துள்ளார். இதுகுறித்து வசந்தி முருகேசனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், ‘‘சசிகலா தயவால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி ‘ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது போல்’ சசிகலாவை புறக்கணிப்பது அதிமுக தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்பதால் சசிகலாவுடன் இணைந்து பணியாற்ற அவரது கட்சியில் சேர்ந்துள்ளேன்’’ என்றார்.

* ஒரு வாரத்தில் கட்சிப்பெயர்: போட்டி நிச்சயம் சசிகலா சத்தியம்
சென்னை விமான நிலையத்தில் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘எங்கள் புதிய கட்சியின் பெயரை மிக விரைவில், ஒரு வார காலத்தில் அறிவிப்பேன். 2026ம் ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சி நிச்சயமாக பங்கேற்கும். கூட்டணி தொடர்பாக, பேசிக்கொண்டு இருக்கிறோம். நல்ல படியாக முடியும். தேர்தலுக்கு குறுகிய காலமாக இருந்தாலும் பரவாயில்லை. தமிழ்நாடு மக்களுக்கு, என்னை நன்றாக தெரியும். இதனால் எந்த பிரச்னையும் எங்கள் கட்சிக்கு இருக்காது. நல்லக்கண்ணு ஏழை மக்களுக்காக தனது உழைப்பை தந்தவர். அவர் எம்பியாக, எம்எல்ஏவாக இருந்தது இல்லை. ஆனால் அவர் சார்ந்த இயக்கத்திற்கு, உண்மையாக இருந்தவர். எல்லோரிடமும் அன்பாக பாசமாக பழக கூடியவர். அவரது இழப்பு குடும்பத்திற்கும் அவரது இயக்கத்திற்கும் பேரழிப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: