சென்னை: பாஜவின் தலைமைத் தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த அலுவலகத்தை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் திறந்து வைப்பதாக இருந்தது.
ஆனால் அவர் வரவில்லை. எடப்பாடியின் பிடிவாதத்தால் தான் அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றுசேர்த்து கூட்டணிஅமைக்க முடியாத நிலை ஏற்பட்டது என்று டெல்லி மேலிடம் எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இதனால், தான் நேற்றைய விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று பியூஸ் கோயலுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டது என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விழாவில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்று அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால், அவரும் புறக்கணித்தார்.
* தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் போன்று எங்கள் கூட்டணியில் எந்த பிடிவாதமும் கிடையாது. பிரதமர் மோடி வந்து விட்டு போன பின்னர், இபிஎஸ்சுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். எங்கள் அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதே மாதிரி நாங்கள் செயல்படுவோம். நிறைய பேர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள் (சசிகலா உள்பட). இன்றைக்கு மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
