திருமண வரவேற்பில் பயங்கரம் பீகாரில் மணப்பெண் மீது காதலன் துப்பாக்கிச் சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பக்ஸர்: பீகாரில் மணமேடையில் இருந்த மணப்பெண் மீது அவரது காதலன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சவுசா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆர்த்தி குமாரி என்பவரின் திருமண விழா நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள சுலேமான்பூரில் இருந்து மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் வந்திருந்தனர். மணப்பெண் ஆர்த்திகுமாரி மற்றும் மணமகன் ஆகியோர் திருமணத்துக்கு முன்னதாக நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தனர்.

இருவரும் மேடை மீது நின்றிருந்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த ஒருவர் ஆர்த்திகுமாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஆர்த்திகுமாரி அளித்த வாக்குமூலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தனது பக்கத்து வீட்டுக்காரரான தீனபந்து என்றும், தன்னை ஒருதலைப்பட்சமாக காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு தீனபந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆர்த்திகுமாரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற தீனபந்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: