‘கேரளம்’ பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு ஒன்றிய அமைச்சரவை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மலையாளம் பேசும் பகுதிகள் இணைந்து கேரளா என்ற மாநிலம் உருவானது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களால் கேரளா என்று அழைக்கப்பட்ட இந்த பெயர், தற்போது அந்த மண்ணின் பூர்வீக பெயரான கேரளம் என்று மாற்றப்பட உள்ளது. மலையாள மொழியில் ‘கேரா’ என்றால் தென்னை மரம் என்றும் ‘ஆலம்’ என்றால் நிலம் என்றும் பொருள்படும் நிலையில், ‘தென்னை மரங்களின் நிலம்’ என்பதை குறிக்கவே ‘கேரளம்’ என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. இந்த பெயர் மாற்றத்தை வலியுறுத்தி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ஆகிய காலங்களில் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் மாநிலத்தின் பெயரை மாற்ற தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சாதாரண பெரும்பான்மையுடன் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதும், இனிமேல் ஒன்றிய, மாநில அரசு ஆவணங்கள், கடவுச்சீட்டு மற்றும் வரைபடங்கள் என அனைத்திலும் ‘கேரளம்’ என்ற பெயரே இடம்பெறும். மாநில பெயர் மாற்றம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘எங்கள் மண்ணின் அடையாளத்தை காக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது வெற்றி பெற்றுள்ளது’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இருந்தாலும் கேரளாவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், ஒன்றிய பாஜக அரசு மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: