புதுடெல்லி: நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கதுறையினர் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்து ஆஜராகமல் இருந்து வந்தார். இதையடுத்து வேண்டும் என்றே விசாரணைக்கு ஆஜராகாமல் ஹேமந்த் சோரன் தவிர்த்து வருவதாகவும், அதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான முன்னெடுப்பை அமலாகத்துறை தொடங்கியது.
இதையடுத்து மேற்கண்ட அமலாக்கத்துறை சம்மன் நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘ஹேமந்த் சோரன் தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தும் நோக்கிலேயே கிரிமினல் நடவடிக்கை முன்னெடுப்பை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது. எனவே அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கிறது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அதிக அளவிலான புகார்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது குறித்து பத்திரிகைகளில் படித்தோம்.
எனவே அந்த புகார்கள் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அதில் நடவடிக்கை எடுப்பதற்கு அமலக்கத்துறையினர் நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி இருந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான முடிவுகளை எட்ட முடியும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார். இதனையடுத்து பேசிய நீதிபதி ஜாய் மால்யா பக்ஷி,‘‘வழக்குகளில் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எட்ட முயலாமல், சம்மன் என்ற பெயரில் அமலக்கத்துறையை பொறுத்தவரைக்கும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறது, குறிப்பாக அதிக அளவிலான புகார்களை பதிவு செய்வது, சம்மன் அனுப்புவது மட்டுமே நோக்கமாக உள்ளது என்று கடும் விமர்சனம் தெரிவித்த அவர் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
