அகமதாபாத்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருடன் வீடியோ வெளியிட்ட சமூக வலைதளப் பிரபலம் மிரட்டலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த 22ம் தேதி நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில், சமூக வலைதளப் பிரபலமான ஆர்ஜே பிரின்சி என்று அழைக்கப்படும் பிரின்சி பரிக், டேவிட் மில்லருடன் ஜாலியாக உரையாடுவது போன்ற வீடியோ ஒன்றை தனது பக்கத்தில் வெளியிட்டார். இந்தியா தோல்வியடைந்த ஆத்திரத்தில் இருந்த ஒரு சில ரசிகர்கள், அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததுடன் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களையும் விடுத்தனர். இதனால் மனமுடைந்த அவர், தான் வெளியிட்ட வீடியோவை தனது பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இது குறித்து பிரின்சி கூறுகையில், ‘இந்த மிரட்டல்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளித்து உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுடன் பழகும் பெண்களுக்கு நேரும் இத்தகைய அவதூறுகளை சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
