பாலக்காடு : பம்பா நதியில் குளிப்பதற்காக சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோணியை சேர்ந்தவர் ஜோஷின் பினு (17), மைலப்பிராவை சேர்ந்தவர் கிரிஸ்ஷாம் பிஜூ (17). இவர்கள் அருகிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இவர்கள் உட்பட 10 பேர் அடங்கிய நண்பர்கள் நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள பம்பா நதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு அவர்கள் தண்ணீரில் நீச்சலடித்தப்படி குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஜோஷின் பினு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனைப்பார்த்த கிரிஸ்ஷாம் பிஜூ காப்பாற்ற முயற்சித்தார்.
அப்போது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு 2 பேரும் மாயமாகனர். இதனைத்தொடர்ந்து மற்றவர்கள் அக்கம்பக்கத்தினருக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை விரைந்து வந்தனர்.
அவர்கள் பல மணி நேரம் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. ஆற்று வெள்ளத்தின் வேகமும் அதிகரித்திருந்தது. இரவு நேரமானதால் அவர்களை மீட்க முடியவில்லை. நேற்று தேடுதல் பணி நடத்தி இருவரையும் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து ராணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
