சென்னை: ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பாமகவில் தந்தை – மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பா.ம.க.வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்மணிக்கு தடை விதிக்க கோரியும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில், “கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ்தான் உள்ளார். அவர் அனுமதியின்றி கட்சியின் பெயர் உள்ளிட்டவைகளை பிறர் பயன்படுத்த முடியாது. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அன்புமணி இதை பயன்படுத்த முடியாது என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.தர்மபிரபு, ராமதாஸ் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை மார்ச் 9 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
