குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். மே மாத இறுதியில் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் 66-வது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கியது. சால்வியா, டேலியா, பால்சம், மேரி கோல்டு, ஆஸ்ட்டர், பேன்சி, பிளாக்ஸ் உட்பட்ட 125-க்கும் மேற்பட்ட ரகங்கள் நடவு செய்யப்பட்டன. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ன.
பூங்கா முழுவதும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ள நிலையில் தற்போது முதற்கட்டமாக நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாக்கும் விதமாக பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இல்லாமல் நாற்றுகள் மீது பைகளை விரித்தும், பகல் நேரங்களில் தினமும் நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாக்கப்பட்டு நாற்றுகளில் இருந்து வரும் பூக்கள் கோடை சீசனில் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
