*10 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு
நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள புறவடை ஜங்ஷன் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் புறவடை ஜங்ஷன் பகுதியோரம் சாலை விரிவு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அவ்வழியாக சென்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய், உடைந்து தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தண்ணீர் வேகம் அதிகமானதால், சுமார் 10 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் பல்லாயிரம் லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் வீணாக வெளியேறியது.
அதேபோல் கெங்கலாபுரம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன் பிறகு உடைந்த குழாயை சீரமைத்தவர்கள், தோண்டிய குழியை அப்படியே விட்டுவிட்டு சென்றனர். இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்த அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, உடைந்த குழாயை சீரமைத்து இருந்தால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுவது தடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் 2 அல்லது 3 நாட்கள் கழித்து தான், உடைந்த குழாயை சீரமைக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
