பெரம்பலூர், பிப். 19: பெரம்பலூரில் ஓய்வுபெற்ற காவலர்கள், ராணுவ வீரர்களுடன் தேர்தல் பணி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட எஸ்பி அனிதா தலைமையில் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று (18 ம் தேதி) திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்பி ஜி.எஸ். அனிதா தலைமையில், ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் தேர்தல் பணி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வர இருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பங்கு, பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக் கப்பட்டது. தேர்தல் பணி காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய சவால்கள், தேவைகள் மற்றும் குறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அனிதா நேரடியாகக் கேட்டறிந்தார்.
மேலும் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். தேர்தல் பணியை ஒழுங்காகவும், பொறுப்புடன் மேற்கொண்டு சிறப்பாக செயல்பட அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
