லண்டன்: சர்வதேச அளவில் பேரழிவை ஏற்படுத்த துடிக்கும் தீவிரவாத அமைப்புகள் தற்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளன. சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ், தனது ஆதரவாளர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சிகளை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அந்த அமைப்பின் ‘வாய்ஸ் ஆஃப் கோரசன்’ என்ற பத்திரிகையில் ஏஐ சாட்போட்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ‘ஏஐ என்பது நெருப்பை போன்றது; அதை வீட்டிற்கு வெளிச்சம் தரவும் பயன்படுத்தலாம் அல்லது வீட்டை எரிக்கவும் பயன்படுத்தலாம்’ என்று அந்த அமைப்பு தனது ஆதரவாளர்களை மூளைச்சலவை செய்து வருகிறது. குறிப்பாக, பாதுகாப்பான முறையில் ரகசியமாக ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்த தொழில்நுட்ப உதவிகளையும் அந்த அமைப்பு வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் நேரடிப் பிரசாரம் மூலம் ஆட்களைச் சேர்த்த தீவிரவாதிகள், தற்போது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி நபர்களைக் கொண்டு 24 மணி நேரமும் மதப் போதனைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் தனிநபர்களின் மனநிலையை அறிந்து அவர்களை எளிதாகத் தங்கள் பக்கம் இழுக்க முடிகிறது.
மேலும், தங்களின் கொள்கைகளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும், தத்ரூபமான போலி வீடியோக்களை (டீப்ஃபேக்) உருவாக்கவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர் ஜொனாதன் ஹால் கூறுகையில், ‘ஏஐ மூலம் சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட இந்த தீவிரவாதப் பிரசார அலை, உலகப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறப்போகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, ஏஐ மூலம் கோடிக்கணக்கான தகவல்களை உடனுக்குடன் மாற்றி அமைப்பதன் மூலம் அவர்கள் தங்களது பிடியை வலுப்படுத்தி வருகின்றனர்’ என்றார்.
