ஈரான் எல்லையில் போர் பதற்றம்; 2 போர் கப்பலை அனுப்பியது அமெரிக்கா: தயார் நிலையில் அதிநவீன போர் விமானங்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த பிறகு, தற்போது தான் வளைகுடா பகுதியில் மிக அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருவதால், அங்கு கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு 15 நாட்கள் கெடு விதித்துள்ளதோடு, தேவைப்பட்டால் ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த மோதல் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தனது இரண்டு பிரம்மாண்ட போர்க்கப்பல்களுடன் அதிநவீன போர் விமானங்களை ஈரான் எல்லைக்கு அருகே தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழலில், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு ஒன்றிய அரசு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் போலந்து போன்ற நாடுகளும் தங்கள் குடிமக்களை வெளியேறச் சொல்லியுள்ள நிலையில், வரும் 26ம் தேதி ஜெனிவாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: