ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் 70 தீவிரவாதிகளை கொன்றுவிட்டோம்: பாக். ராணுவம் அறிவிப்பு

 

காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றுமுன்தினம் நடத்திய தாக்குதலில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரீக்- இ- தலிபான்(டிடிபி) அமைப்பு பாகிஸ்தானில் அடிக்கடி தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பன்னு பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்னதாக, இஸ்லாமாபாதில் உள்ள மசூதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஆப்கானில் உள்ள தீவிரவாத அமைப்பே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் பக்டிகா மாகாணங்களில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த நடவடிக்கையில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாக்.ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தி தொடர்பாளர் ஸபிஹூல்லா முஜாகித் தனது எக்ஸ் பதிவில், நங்கர்ஹார், பக்டிகாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசியது. இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் பலியானார்கள். 70 தீவிரவாதிகள் பலியானதாக பாகிஸ்தான் கூறுவது தவறான தகவல் என குறிப்பிட்டுள்ளார்.
நங்கர்ஹாரில் உள்ள ஆப்கானிஸ்தான் செஞ்சிலுவை சங்க இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதில் 18 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related Stories: