தீவுத்திடல் பொருட்காட்சிக்கு வந்த 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

மாதவரம், பிப்.24: தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சிக்கு பெற்றோருடன் வந்த 6 வயது சிறுவனை அங்கு சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று கடித்து குதறியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவன் அத்விக் (6), நேற்று முன்தினம் மாலை தனது பெற்றோருடன் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியை சுற்றி பார்க்க வந்துள்ளான். அப்போது, பொருட்காட்சி வளாகத்தில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் அத்விக்கை விரட்டி தொடையில் கடித்து குதறியது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், தெருநாயை விரட்டிவிட்டு, படுகாயமடைந்த சிறுவனை மீட்டு எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனக்கு டாக்டர்கள் நோய் எதிர்ப்பு தடுப்பூசி போட்டனர். பின்னர் சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்படி திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுவனை தெரு நாய் கடித்த தகவல் பொருட்காட்சி முழுவதும் பரவியதை தொடர்ந்து, பொருட்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின்படி மாநகராட்சி ஊழியர்கள் பொருட்காட்சியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை பிடித்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: