போதைபொருள் கடத்தல் தலைவன் ஒசேகுரா கொலை மெக்சிகோவில் வன்முறை வெடித்தது: இந்தியர்களுக்கு எச்சரிக்கை

 

குவாடலஜாரா: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனை ராணுவம் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் வீடுகளுக்குள் பத்திரமாக இருக்க இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. மெக்சிகோ நாட்டில் ‘எல் மென்சோ’ என அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ் என்பவன் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன். மெக்சிகோ மற்றும் அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி. இவனது கும்பல் அமெரிக்காவுக்கு பென்டானில், மெத்தம்பெட்டமைன், கோகைன் போன்ற போதைப்பொருட்களை அதிகளவில் கடத்தி வருகிறது. இதை தடுக்க முயலும் அதிகாரிகளை இக்கும்பல் மிக கொடூரமாக கொலை செய்துள்ளது. இதனால் ஒசேகுரா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பல லட்சம் ரூபாயை சன்மானமாக மெக்சிகோ, அமெரிக்க அரசுகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் உள்ள தனது வீட்டில் ஒசேகுரா தங்கியிருப்பதாக மெக்சிகோ ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய ராணுவம் நேற்று முன்தினம் டபல்பா நகருக்கு சென்று ஒசேகுராவை சுற்றிவளைத்தது. அப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டு தாக்கினர். ராணுவத்தினர் நடத்திய பதிலடியில் கும்பல் தலைவன் ஒசேகுரா கொல்லப்பட்டான். இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் கார்கள் வழிமறிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. ஜாலிஸ்கோ, டமாலிபாஸ், குரேரா, மிக்கோகன், நியூவோ லியோன் உள்ளிட்ட மாகாணங்களில் வன்முறை பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில், மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அங்குள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், உள்ளூர் ஊடகங்கள் மூலம் தகவல்களை கண்காணிக்குமாறும் வலியுறுத்தி உள்ளது. இதே போல பல நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

Related Stories: