புதுடெல்லி: இந்தியா-பிரேசில் இடையேயான வருடாந்திர வர்த்தகத்தை வரும் 2030ம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலராக (ரூ.2.7 லட்சம் கோடி) உயர்த்த பிரதமர் மோடி – அதிபர் லூயிஸ் முடிவு செய்துள்ளனர். இருதலைவர்கள் இடையேயான சந்திப்பில் அரிய மண் தாதுக்கள் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெல்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்க 5 நாள் பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பாதுகாப்பு, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், சர்வதேச வர்த்தகத்தில் அதன் தாக்கம் குறித்தும் மோடி-லூயிஸ் ஆலோசித்தனர். இந்த விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு டிரம்ப் நிர்வாகம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்க வேண்டுமென இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் பி.குமரன் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்யை தொடர்ந்து, முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்கள், டிஜிட்டல் கூட்டாண்மை, சுரங்கம், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாரம்பரிய அறிவுசார் அமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து பிரேசில் அதிபருடன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ‘‘லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி பிரேசில்.
எங்கள் வர்த்தகம் வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அது நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பாதுகாப்புத் துறையில் எங்கள் ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். செயற்கை நுண்ணறிவு, சூப்பர் கம்ப்யூட்டர்கள், குறைக்கடத்திகள் மற்றும் பிளாக்செயின் போன்ற துறைகளிலும் எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.
உலக அரங்கில் இந்தியா-பிரேசில் கூட்டாண்மை வலுவானதாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் இருந்து வருகிறது. ஒவ்வொரு பிரச்னையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். தீவிரவாதமும் அதன் ஆதரவாளர்களும் அனைத்து மனிதகுலத்திற்கும் எதிரிகள் என்பதில் இந்தியாவும் பிரேசிலும் ஒருமனதாக உள்ளன’’ என்றார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களை கடுமையாக கண்டித்த லூயிஸ் தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் அல்லது நாட்டுடனும் இணைக்கக்கூடாது என்றார்.
* கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்தியா-பிரேசில் இடையேயான வர்த்தகம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
* இந்திய ஏற்றுமதிகள் 6.77 பில்லியன் டாலர்களாகவும், பிரேசலில் இருந்து இறக்குமதிகள் 5.43 பில்லியன் டாலர்களாகவும் இருந்தன.
