×

டி.20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா-தென்ஆப்ரிக்கா இன்று மோதல்: முதல் வெற்றியை பெறப்போவது யார்?

அகமதாபாத்: 10வது டி.20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்று முடிந்த நிலையில், சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. குரூப்-1 பிரிவில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், குரூப்-2 பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்ரிக்காவுடன் மோதுகிறது.

உலகை அச்சுறுத்தும் அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியில், லீக் சுற்றில் இஷான்கிஷன் 176, கேப்டன் சூர்யகுமார் 162 ரன் எடுத்துள்ளனர். திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் துபே என வலுவான பேட்டிங் இருக்கிறது. நம்பர்-1 டி.20 பேட்டரான அபிஷேக் சர்மா, ஆடிய 3 போட்டியிலும் டக்அவுட் ஆகியுள்ளார். இருப்பினும் அவருக்கு அணியில் இன்று மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அவர் பார்ம்முக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பவுலிங்கில் நம்பர்-1 பவுலரான வருண்சக்ரவர்த்தி 9 விக்கெட் எடுத்துள்ளார். பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த அக்சர்பட்டேல் மீண்டும் களம் இறங்குகிறார். மறுபுறம் தென்ஆப்ரிக்க அணியும் சூப்பர் பார்மில் உள்ளது. கேப்டன் மார்க்ரம் (178), ரியான் ரிக்கல்டன் (145), டிகாக் (118) ஆகியோருடன் டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்கள் உள்ளனர்.

பவுலிங்கில் லுங்கி நிகிடி (8 விக்கெட்), ஆல்ரவுண்டர் மார்கோ ஜான்சன் (7 விக்கெட்) மிரட்டி வருகின்றனர். இவர்களுடன் ரபாடா, கார்பின் போஷ், சுழலில் கேசவ் மகராஜ் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பர். சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடுவது இந்தியாவுக்கு சற்று கூடுதல் பலமாக இருக்கலாம். இருப்பினும் தென்ஆப்ரிக்காவும் கடும் சவால் அளிக்க காத்திருக்கிறது.

கடந்த டி.20 உலக கோப்பை பைனலில் இந்தியாவிடம் தோற்றநிலையில், அதற்கு பழி தீர்க்க களத்தில் முழுதிறனையும் தென்ஆப்ரிக்கா வெளிபடுத்தும். லீக் சுற்றில் இரு அணிகளும் 4 போட்டியிலும் வென்றுள்ளன. அதனால், 5வது தொடர் வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

* தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா, 2024ல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த போட்டியில் 283/1 ரன் குவித்தது தான் அதிகப்பட்சம். தென்ஆப்ரிக்கா, இந்தூரில் 2022ல் நடந்த போட்டியில் 227/3 ரன் எடுத்தது தான் அதிகபட்ச ரன்னாகும். குறைந்த பட்ச ரன்: இந்தியா 92, தென்ஆப்ரிக்கா 74.
* இந்தியாவுக்கு எதிராக டேவிட் மில்லர் 28 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதத்துடன் 563 ரன் எடுத்து டாப்பில் உள்ளார். இந்திய தரப்பில் திலக்வர்மா 10 போட்டியில் 2 சதம், 2 அரைசதத்துடன் 496 ரன் விளாசி உள்ளார்.
* பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 14 போட்டியில் 23, வருண் சக்ரவர்த்தி 8 போட்டியில் 22, லுங்கி நிகிடி 9 போட்டியில் 16 விக்கெட் எடுத்து முதல் 3 இடத்தில் உள்ளனர்.
* டி.20 உலக கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக 12 போட்டியில் வென்றுள்ளது. இன்று 13வது வெற்றியை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
* உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 9 டி.20 போட்டிகளில் ஆடி 7ல் வென்றுள்ளது. 2ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. தென்ஆப்ரிக்கா இங்கு 4 போட்டியில் ஆடி 3ல் வென்றுள்ளது. 1ல் தோல்வி அடைந்துள்ளது.
* இரு அணிகளும் இதற்கு முன் இங்கு கடந்த டிச.19ல் டி.20 போட்டியில் ஆடியது. இதில் இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.
* அகமதாபாத் ஸ்டேடியத்தில் இதுவரை 12 சர்வதேச டி.20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 7ல் முதலில் பேட் செய்த அணியும், 4ல் சேசிங் அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் (ஆப்கன்-தென்ஆப்ரிக்கா) முடிந்துள்ளது.

* இதுவரை நேருக்கு நேர்…
டி.20 கிரிக்கெட்டில் இந்தியா, தென்ஆப்ரிக்கா அணிகள், இதற்கு முன் 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21ல் இந்தியா, 13ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 10 போட்டிகளில் இந்தியா 8ல் வென்றுள்ளது. உலக கோப்பையில் இரு அணிகளும் 7 முறை மோதியிருக்கிறது. இதில் 5ல் இந்தியா, 2ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளது.

* அபிஷேக் சர்மா பார்ம் பற்றி கவலையில்லை
அகமதாபாத்தில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை பார்த்து, நான் கவலைப்படுகிறேன். ஏன் அவரது ஆட்டத்தை நினைத்து இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?. அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ள போகும் எதிரணிகளை நினைத்து தான், நான் கவலைப்படுகிறேன்.

அவர் பெரிய ஷாட்களை ஆடத்தொடங்கினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம். கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார்.

இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம்’’ என்றார். வலது கை ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அபிஷேக் சர்மா திணறுகிறாரா என்ற கேள்விக்கு, “எந்த வகையான பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் போதுமான கிரிக்கெட் விளையாடியுள்ளோம். இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். பல கடினமான சூழல்களை கடந்து வந்துள்ளோம்’’ என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Tags : India ,South Africa ,T20 World Cup Super 8 round ,Ahmedabad ,T20 World Cup ,Super 8 ,South ,Africa ,Zimbabwe ,West Indies ,Zealand ,Pakistan ,Sri Lanka ,England ,
× RELATED உலக கோப்பை: நியூசிலாந்து – பாகிஸ்தான்...