×

10 ஆண்டுக்கு பின் சாதனை: ஆஸி., மண்ணில் டி.20 தொடரை வென்று இந்திய மகளிர் அசத்தல்

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் 10 ஆண்டுக்கு பின் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்திருந்தன.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டி.20 போட்டி நேற்று அடிலெய்டில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஸ்மிருதி மந்தனா-ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.

இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 59 ரன்களை சேர்த்திருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸூம் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரியளவில் ரன்களை சேர்க்க தவறினர். இதன்மூலம் இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை சேர்த்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 177 ரன் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜார்ஜியா வோல் 10 ரன்களிலும், பெத் மூனி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். பிறகு இணைந்த போப் லிட்ச்ஃபீல்ட்-ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.

இதில் லிட்ச்ஃபீல்ட் 26 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஆஷ்லே கார்ட்னரும் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள், இந்தியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டில், ஸ்ரீ சாரணி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி.20 தொடரையும் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2016ம் ஆண்டிற்கு பிறகு, இந்திய மகளிர் அணி முதல் முறையாக டி.20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருதை வென்றார்.

Tags : Aussie ,T20 ,Adelaide ,women's team ,Australia ,
× RELATED உலக கோப்பை: நியூசிலாந்து – பாகிஸ்தான்...