- இந்தியா
- தென் ஆப்பிரிக்கா
- சூப்பர் 8 சுற்று
- T20 உலக கோப்பை
- அகமதாபாத்
- 10 வது டி20 உலகக் கோப்பை
- ஜிம்பாப்வே
- மேற்கிந்திய தீவுகள்
- நியூசிலாந்து
அகமதாபாத்: 10வது டி.20 உலக கோப்பை தொடரில் நேற்றுடன் லீக் சுற்று முடிந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட்இண்டீஸ் , குரூப் 2 பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடம் பெற்றுள்ளன. கொழும்பில் இன்று இரவு 7 மணிக்கு சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதுகின்றன. குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் ஆப்ரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. உலக அச்சுறுத்தும் அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியில் லீக் சுற்றில் இஷான்கிஷன் 176, கேப்டன் சூர்யகுமார் 162 ரன் எடுத்துள்ளனர். திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் துபே என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. நம்பர் 1 டி.20 பேட்டரான அபிஷேக் சர்மா 3 போட்டியிலும் டக்அவுட் ஆனார். இருப்பினும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர் பார்முக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி 9 விக்கெட் எடுத்துள்ளார். பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த அக்சர்பட்டேல் மீண்டும் களம் இறங்குகிறார். மறுபுறம் தென்ஆப்ரிக்க அணியும் சூப்பர் பார்மில் உள்ளது. கேப்டன் மார்க்ரம் (178), ரியான் ரிக்கல்டன் (145), டிகாக்(118), ஆகியோருடன் டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பவுலிங்கில் ஆல்ரவுண்டர் மார்கோ ஜான்சன் (3 போட்டியில் 7 விக்கெட்), லுங்கி நிகிடி (8 விக்கெட்) மிரட்டி வருகின்றனர். இவர்களுடன் ரபாடா, கார்பின் போஷ், சுழலில் கேசவ் மகராஜ் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பர். சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடுவது இந்தியாவுக்கு சற்று கூடுதல் பலமாக இருக்கலாம். இருப்பினும் தென்ஆப்ரிக்காவும் கடும் சவால் அளிக்க காத்திருக்கிறது. லீக் சுற்றில் இரு அணிகளும் 4 போட்டியிலும் வென்றுள்ள நிலையில் 5வது தொடர் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
