×

சில்லி பாய்ன்ட்…

* 800 மீட்டர் ஓட்டம் ஹாட்கின்சன் சாதனை
லைவின்: பிரான்சின் லைவின் நகரில் உலக தடகள உள்ளரங்க போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிரிட்டனை சேர்ந்த கீலி ஹாட்கின்சன், அபாரமாக செயல்பட்டு போட்டி தூரத்தை 1:54:87 நிமிடத்தில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, ஸ்லோவேனியா வீராங்கனை ஜோலண்டா கெப்லக், 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 1:55:82 நிமிடத்தில் கடந்ததே இது வரை உலக சாதனையாக நீடித்து வந்தது. அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. இவர், சமீபத்தில் நடந்த யுனைடெட் கிங்டம் உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 1:56:33 நிமிடத்தில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

* கால்பந்து பைனலில் வன்முறை 19 ரசிகர்களுக்கு சிறை
ரபாட்: ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டிகள், சமீபத்தில் ரபாட் நகரில் நடந்தன. அதன் இறுதிப் போட்டியில் மொராக்கோ – செனகல் அணிகள் மோதியபோது ரசிகர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக செனகலை சேர்ந்த 18 ரசிகர்களும், பிரான்சை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய மொராக்கோ நாட்டு நீதிமன்றம், 19 பேருக்கும் ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

* தேனீக்கள் கொட்டி அம்பயர் மரணம்
உன்னாவோ: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ நகரில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு, கான்பூர் கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த மாணிக் குப்தா (60) நடுவராக செயல்பட்டார். போட்டியின் தேனீர் இடைவேளையின்போது, யாரும் எதிர்பாராத வகையில் தேனீக்கள் கூட்டமாக வந்து அங்கிருந்தோரை கொட்ட ஆரம்பித்தன. பலர் ஓட்டம் பிடித்தபோதும், வயது முதிர்வு காரணமாக, மாணிக் குப்தா தடுமாறி கீழே விழுந்தார். அவரை தேனிக்கள் ஏராளமாக திரண்டு கொட்டி விட்டு பறந்தன. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Tags : Hotkinson Adventure Livin: ,Livin, France ,Keeley Hutkinson ,Great Britain ,
× RELATED The Hundred கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்...