கடலூர் மத்திய சிறையில் 100 போலீசார் சோதனை

கடலூர், பிப். 8: கடலூர் மத்திய சிறையில் நேற்று அதிகாலை டிஎஸ்பி தலைமையில் 100 போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. கடலூர் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட செல்போன் உபயோகம் மற்றும் பொருட்கள் பயன்பாடு குறித்து புகார்கள் வந்தது. இதையடுத்து எஸ்பி அபிநவ் உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை டிஎஸ்பி சாந்தி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீசார் சிறைக்குள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அறையில் சோதனை நடத்தியதாக தெரிகிறது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த வாரம் சிறைத்துறை டிஐஜி ஆய்வு மேற்கொண்ட நிலையில் கடலூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட 100 போலீசார் மீண்டும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலக்கட்டங்களில் சிறைச்சாலையில் போலீசார் சோதனை நடத்துவது வழக்கமானது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: