பேராவூரணி, பிப்.20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் ஆவணம் பள்ளிவாசலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார். கிளை பொறுப்பாளர்கள் யூசுப், இமாம் யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரமலான் முதல் பிறை தென்பட்டதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் ஸஹர் உணவருந்தி சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை உண்ணாமல் பருகாமல் இருந்து நோன்பு திறந்தனர்.
நிகழ்ச்சியில் ஆவணம் அல் ஹிக்மா மக்தப் மதரஸா மாணவ, மாணவிகள் முதன் முதலாக நோன்பை கடைபிடித்து இஃப்தாரில் நோன்பை நிறைவு செய்தனர். ஐந்து வயது சிறுவர்கள் பலர் உணவு அருந்தாமலும், தண்ணீர் குடிக்காமலும் பதினான்கு மணிநேரம் நோன்பிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.
