சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது கடந்த இரண்டு நாட்கள் நடந்த விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: பெரியாரின் சிந்தனை, அண்ணாவின் சொல், கலைஞரின் செயல், முதல்வரின் உழைப்பு என்ற இந்த நான்கு தலைவர்களின் தனிப்பெரும் தன்மையால்தான் தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் நிம்மதியாக உறங்கச் செல்கிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்றே முதல் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து வசதி. பெண்கள் தங்களுடைய பிறந்த வீட்டிற்கு செல்வதற்குக்கூட கணவன்மார்களின் அனுமதியை எதிர்பார்த்திருந்த காலம் மாறி, பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் அவர்களை சிறகுகள் விரித்து சுதந்திரப் பறவைகளாக பயணிக்க வைத்தவர் முதலமைச்சர்.
அதனால்தான், இன்றும் கிராமப் பகுதிகளில் விடியல் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பெருமையோடு குறிப்பிடுகிறார்கள், ‘நாங்கள் பயணம் செய்வது ஸ்டாலின் பஸ்சில்’ என்று. நாட்டுக்கே வழிகாட்டியாக, பெண்களுக்கு அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது.
பசித்த வயிறுடன் பாடம் படிக்கும் கொடுமையை மாற்றி, பசியின்றி உற்சாகத்துடன் கல்வி பயில அறிமுகப்படுத்தப்பட்டதுதான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்க அன்புக்கருணை இல்லங்கள், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் என இது தாய்மாரின் ஆட்சி என்பதை உறுதி செய்யக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளி மாணவர்கள் சாதனையாளராக உருவாகி, உலகெங்கும் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பயின்றிட வழிவகுக்கும் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களால் கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது. நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். ஒருபுறம் தொன்மையையும், மறுபுறம் டைடல் பார்க் போன்ற தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுத்தார். அதே வழியில், இந்த அரசு, தொன்மைக்கு ஒருபுறமும், தொழில்நுட்பத்திற்கு மறுபுறமும் என உயர் நோக்கோடு நடைபோடுகிறது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், செமிகண்டக்டர் மிஷன் 2030, இண்டஸ்ட்ரி 4.0 போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தம் போன்ற செயற்கை நெருக்கடிகளையும் ஒருசேர எதிர்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை பாதுகாத்து வளர்ச்சி பாதையில் வழிநடத்திக் கொண்டிருப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.
ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகையை ஒரே நாளில், காலை சூரியன் உதிக்கும் நேரத்தில் 6.32 மணிக்கு, ஒரு நொடி தாமதமின்றி வங்கிக் கணக்கில் மகளிருக்கு ரூ.5 ஆயிரம் செலுத்திய துல்லியமான நிர்வாகத் திறனுக்கு சொந்தக்காரர் நம் முதல்வர். இது துல்லியத் தாக்குதல் அல்ல, ஒரு தாயுமானவரின் அன்பான அரவணைப்பு. நீங்கள் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சி செய்தால், நான் ஐந்தாயிரம் ரூபாயாக கொடுப்பேன் என்று முதல்வர் எடுத்த முடிவை இன்று மகளிர் மனம் குளிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகையை யாராவது தடுத்து நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடு கொந்தளிக்கும், அந்தக் கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டின் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். எதிர்க்கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் நம் முதல்வர். அவருக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட எதிர்க்கட்சியினர் இருக்கிறார்கள், ஆனால் எதிரிகளே கிடையாது. மெட்ரோ திட்ட நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. ஜல்ஜீவன் திட்ட நிதி நிறுத்தி வைக்கப்பட்டது.
இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல் ஒன்றிய அரசு உருவாக்கும் செயற்கை நிதி நெருக்கடிகளையும் இந்த அரசு சமாளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சாதி மத மோதல்கள் எதுவும் இல்லை. தமிழகத்தில் இந்த 5 ஆண்டுகளில் சமூக அமைதி நிலவி மதநல்லிணக்கம் உயர்வு பெற்றுள்ளது. அமைதி பூங்காவாக தமிழகம் உள்ளது. நாம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை, தென் கிழக்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பியாவின் வளர்ந்த நாடுகளுடன் நாம் போட்டியிடுகிறோம்.
இந்த நவீன யுகத்தில், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டிற்கு முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அமைந்தது தமிழ்நாட்டின் மாபெரும் நல்வாய்ப்பு. இந்த மகத்தான தலைவருடைய கரங்களில் பாதுகாப்பாக வெற்றிக்கொடி ஏந்தி, நாம் ஒன்றாக பயணிப்போம், வெல்வது உறுதி. இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.
