களக்காடு அருகே தொடரும் அட்டகாசம் விளைநிலங்களை துவம்சம் செய்த காட்டு பன்றிகள்

களக்காடு, பிப்.21:களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்ைல மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊர் பகுதிகளில் முகாமிட்டு விளைநிலங்களை துவம்சம் செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை, பாப்பான்குளம் விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்ட முயற்சி செய்தனர்.

ஆனால் காட்டு பன்றிகள் நாலாபுறங்களில் இருந்தும் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர். இருப்பினும் சத்தங்களை எழுப்பி விரட்டினர். எனினும் காட்டு பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை சேதப்படுத்தின. இவைகள் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயி ஜெபஸ்டின் துரைக்கு (38) சொந்தமானது ஆகும். கதிர் வந்து, அறுவடைக்கு தயாராகி வரும் நெல் பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளின் உயிருக்கும், பயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தினசரி அவைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே காட்டு பன்றிகளை சுடும் பணிகளை தீவிரப்படுத்தவும், அதுபோல காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்கவும், வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories: