தென்காசி,பிப்.21: தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கு ராணிகுமார் எம்பி உத்தரவிட்டுள்ளார்.
தென்காசியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது. ராணி குமார் எம்பி தலைமை வகித்தார். ராபர்ட் புரூஸ் எம்பி முன்னிலை வகித்தார். கலெக்டர் கமல் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் தென்காசி எம்பி ராணி குமார் பேசுகையில், தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளின் அறிக்கையினை மாதம்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஆகியவற்றை டிசம்பர் இறுதிக்குள் சரி செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதையும், மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து எடுப்பதையும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என்றார். முன்னதாக, உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் உலக தாய்மொழி தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். கூட்டத்தில், எஸ்பி மாதவன். மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
