வடமதுரை, பிப்.20: வடமதுரையில், மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும்போது எதிர்பாராத விதமாக ரயில்வே கேட் சிக்னல் பழுதடைந்தது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள, வடமதுரை-செங்குறிச்சி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இதன் அருகே தனியார் நிலத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக தமிழ்நாடு மின்வாரியத்தினர் பள்ளம் தோண்டினர். அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே சிக்னல் வயர் சேதமடைந்து, ரயில்வே கிராசிங் கேட் அருகே உள்ள சிக்னல் விளக்கு செயல்படவில்லை.
இதனால் கேட்டின் அருகே உள்ள சிக்னல் லைட் எரியாததால், வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் மயிலாடுதுறை-செங்கோட்டை ரயிலுக்கு கேட் கீப்பர், கொடி அசைத்து சிக்னல் கொடுத்து ரயிலை அனுப்பி வைத்தார். மற்ற ரயில்கள் வழக்கம் போல் சென்றன. இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் ரயில்வே சிக்னல் பொறியியல் துறையினர் மற்றும் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் பழனியாண்டி குழுவினர் சேதமடைந்த ரயில்வே சிக்னல் வயர்களை பழுது பார்த்து சரி செய்தனர்.
