கந்தர்வகோட்டை,பிப்.20: கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்களுக்கு வாழ்வாதார கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலை முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிமலை தலைமை வகித்தார்.
காத்திருப்பு போராட்டத்தில் கிராம உதவியாளர்களின் கோரிக்கை குறித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்ததாகவும், இதுவரை எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றித் தரவில்லை எனவும் விரைந்து எங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பினர் மற்றும் வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
