புதுடெல்லி: ரூ.40 ஆயிரம் கோடி முறைகேடு புகாரில் அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி தெரிவித்து உள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் ரூ.1.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ.40 ஆயிரம் மோசடி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
அதில்,‘‘கடந்த ஆண்டு இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டதில் இருந்து அனில் அம்பானி வெளிநாடு செல்லவில்லை. வரும் காலங்களிலும் எந்த திட்டமும் கிடையாது. இருப்பினும் வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் அவசர தேவை என்றால் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்வார். அனுமதி இல்லாமல் கண்டிப்பாக அனில் அம்பானி வெளிநாடு செல்ல மாட்டார். குறிப்பாக விசாரணை அமைப்புகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் ’’ என்று தெரிவித்தார். 26ல் ஆஜராக ஈடி மீண்டும் சம்மன்: நிதி மோசடி வழக்கில் வரும் 26ம் தேதி ஆஜராகும்படி அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
