தென்காசியில் நகைக்கடை உரிமையாளரை தாக்கிய 4பேர் கைது

தென்காசி, பிப்.20: தென்காசி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் மகன் முகமது அர்ஷத் (29). இவர் நகைக்கடை வைத்து தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் மற்றொரு நகை கடை நடத்தி வரும் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகைதீன் அமானுல்லா மகன் காலிப் முஹம்மது (31), அவரது சகோதரர்கள் ரசூல் அகமது அஸ்லம் (28), ஹாஜி என்ற அர்ஷத் முபாரக் (26) மற்றும் நடுப்பேட்டை தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மகன் முஹம்மது நயினார் (25) ஆகியோருக்கும் இடையே பழைய நகைகளை வாங்கியது மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முகமது அர்ஷத் கடையில் இருந்த போது காலிப் முகமது மற்றும் அவருடன் வந்தவர்கள் கடையில் அமர்ந்து இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே முகமது அர்சத்தை கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத்தொடர்ந்து தென்காசி போலீசார் முகமது அர்ஷத் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காலிப் முகமது, ரசூல் முகமது அஸ்லம், ஹாஜி என்ற அர்ஷத் முபாரக், முகம்மது நயினார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இரண்டு தரப்பினருமே பஜாரில் நகைக்கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: