தஞ்சாவூர், பிப்.19: தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீமான் இளையராஜா அனைவரையும் வரவேற்றார்.
நாட்டுப்புறவியல் துறையின் தலைவர் பேராசிரியர் காமராசு கருத்தரங்கின் நோக்கம் குறித்து நோக்கவுரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் செல்லபாலு பாமர மக்களின் நாட்டுப்புற உணர்வுகள் எனும் தலைப்பிலும், முனைவர் ஏழுமலை தெருக்கூத்துக் கலையும் கள ஆய்வு அனுபவங்களும் எனும் தலைப்பிலும், முனைவர் சக்திவேல் கள ஆய்வு அனுபவங்களும் சிக்கல்களும் எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
நிறைவாக முனைவர் மாலதி நன்றி கூறினார். இந்நிகழ்வினை முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழரசன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
