கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை: மேல் முறையீடு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கடந்த 2011ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மகன் ரமேஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், தேவதாஸ், அம்புரோஸ், ரஞ்சன், வெங்கடேசன், மஞ்சுநாதன், கருணாநிதி, சூரியபிரகாஷ் மற்றும் ராமன் ஆகிய 9 பேர் வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, வீச்சறிவாள் கொண்டு இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த ஏழுமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். இது தொடர்பாக, ஏழுமலை அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை காவல்துறை தரவில்லை எனக்கூறி அனைவரையும் 2019ம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது 9 பேரும் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம், மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த விடுதலை உத்தரவு ரத்து செய்யப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அனைவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, குற்றவாளிகளிடம் தண்டனை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு 9 பேரும், இது ஒரு பொய் வழக்கு. தங்களுக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 9 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதம் விதிதுத தீர்ப்பளித்தனர். மேலும், குற்றவாளிகளின் கோரிக்கையை ஏற்று மேல்முறையீடு செய்ய 90 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: