விசாகப்பட்டினத்தில் கடற்படை தினம் 71 போர் கப்பல்கள் அணிவகுப்பு: ஜனாதிபதி, முதல்வர் பார்வையிட்டனர்

திருமலை: விசாகப்பட்டினத்தில் கடற்படை தினத்தையொட்டி 71 போர் கப்பல்கள் அணிவகுத்து சாகசம் செய்தன. இதனை ஜனாதிபதி, ஆந்திர கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்திய கடற்படை சார்பில் `சர்வதேச கடற்படை தினம்’ கடந்த 15ம் தேதி தொடங்கியது. மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த கடற்படை சாகச நிகழ்ச்சி நாட்டின் வரலாற்றில் இரண்டாவது முறையாக விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன் கடந்த 2016ல் நடந்துள்ளது. பல நாடுகளின் ஒருங்கிணைப்புடன் போர் ஒத்திகை பரிமாற்றம் செய்துகொள்ளும் வகையில் விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி வரை என 10 நாட்கள் நடக்கிறது.

சுமார் 50 நாடுகளை சேர்ந்த 4,000 விருந்தினர்கள், 70க்கும் மேற்பட்ட அதிநவீன போர்க்கப்பல்கள் இதில் பங்கேற்றுள்ளன. கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்திய பெருங்கடல் கடல்பரப்பில் பல நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு இந்திய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களின் கலாச்சார மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டது. மனித குலத்தின் உயிர்வாழ்வுக்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே சர்வதேச கடற்படை மதிப்பாய்வின் நோக்கம்.

இந்நிலையில் நேற்று நடந்த 4ம் நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதிமுர்மு, கவர்னர் அப்துல்நசீர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணைமுதல்வர் பவன்கல்யாண், ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல நாடுகளை சேர்ந்த 71 போர்க்கப்பல்கள் அணிவகுப்பு கடற்படையினர் திறமைகளை வெளிப்படுத்தின. வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடலில் நடைபெறும் போர் பயிற்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கு முன்பு வரை அந்தமானில் மட்டுமே நடத்தப்பட்ட கடற்படை ‘மிலன்’ பயிற்சிகள், சிறந்த உட்கட்டமைப்புக்காக விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கடற்படை படைகளின் திறன்களை உலகிற்கு காட்டுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை நெருக்கமாக பார்க்கும் அரிய வாய்ப்பையும் பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: