புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெய்தா தேப் சர்க்கார் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘டெல்லியில் காணாமல் போன 807 பேரில், 509 பேர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறையின் தரவுகளின்படி, தலைநகரில் நாளொன்றுக்கு சராசரியாக 54 பேர் காணாமல் போகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நீதிமன்றம் ஒரு அவசரகால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் கார்யா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘டெல்லியில் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை, டெல்லி அரசு, ஒன்றிய அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். மேலும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கம் கொண்ட பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதில் முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒன்றிய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
