அமிர்தசரஸ்: பஞ்சாப் திருமணத்தில் மணமகள் மீது ரூ.8.5 கோடி பணத்தை மணமகன் குடும்பத்தினர் கொட்டியதாக பரவும் வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் திருமண கொண்டாட்டத்தின் போது மணமகள் மீது மணமகன் குடும்பத்தினர் பணக்கட்டுகளை வீசுவது வழக்கம். அதே போல் தரன் தரனில் நடந்த விழாவில் மணப்பெண் மீது ரூபாய் நோட்டுகளை வீசும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மணமகள் மீது ரூ.8.50 கோடி ரூபாய் நோட்டுகள் வீசியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று நடந்த திருமண கொண்டாட்டத்தின் போது மணமகள் மீது ரூபாய்.8.50 கோடி ரொக்கத்தை பொழிந்ததாகக் கூறப்படும் தகவலை பஞ்சாபில் உள்ள மணமகனின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
மணமகனின் சகோதரர் சிக்கந்தர் சிங், திருமண கொண்டாட்டத்தின் போது மணமகள் மீது பணம் கொட்டப்பட்டாலும், அந்தத் தொகை ஆன்லைனில் பரவும் ரூ.8.50 கோடிக்கு அருகில் இல்லை. எனது சகோதரர் ஆஸ்திரேலியாவில் ஒரு லாரி தொழில் நடத்துகிறார். திருமணம் பிப்ரவரி 14 அன்று நடந்தது. நாங்கள் பணத்தைப் பொழிந்து கொண்டாடினோம், ஆனால் அது சுமார் ரூ. 2 லட்சம். சமூக ஊடகங்கள் அதை கோடிகளாக மிகைப்படுத்தி கூறுகின்றன, இது தவறு’ என்றார். விழாவை நடத்திய நிகழ்ச்சி மேலாளரும் டிஜேவும் வைரலான ரூ.8.5 கோடி கூற்றை நிராகரித்தனர். அவர்கள் தோராயமாக ரூ.4 லட்சம்தான் வீசப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் இந்த கோடி தொகை எப்படி வெளிவந்தது மற்றும் ஈர்க்கப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.
