சக்கரன்கோவில், பிப்.19: சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். நிவாரணம் கேட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுமலையடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மாரிமுத்து (23). இவர் டிராக்டர் மூலம் நேற்று முன்தினம் மாலை சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வயர் டிராக்டர் மீது உராய்வு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மின்வாரியத்திற்கும், கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாரிமுத்து உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த மாரிமுத்து குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று கூறி கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் முன்பு மாரிமுத்துவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு மாரி முத்துவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
