தூத்துக்குடி, பிப். 19: எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், தொடர் கவனிப்புக்கும், இரும்புச்சத்து சொட்டு மருந்து, வைட்டமின் பி3 மற்றும் மல்டி வைட்டமின் சொட்டு மருந்துகள் அடங்கிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கு, பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
டீன் சிவக்குமார் தலைமை வகித்து 14 குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெட்டகங்களை, குழந்தைகளின் தாயாரிடம் வழங்கி பேசினார். அப்போது, குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் எதிர்கால இந்தியா வலுவானதாக இருக்கும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பெட்டகத்தில் இரும்புச்சத்து திரவம், வைட்டமின் பி3 சொட்டு மருந்து, மல்டி வைட்டமின் சொட்டு மருந்து ஆகியவை இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், எடை அதிகரிப்புக்கும் இந்த மருந்துகள் உதவும். இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த பெட்டகத்திலும் ஒரு மருத்துவ அட்டை இருக்கும். அதில் 12 மாதங்கள் வரை குழந்தையின் எடை, நீளம் மற்றும் தலை சுற்றளவு ஆகியவை தொடர்ந்து பதிவு செய்யப்படும். இது குழந்தையின் வளர்ச்சியை டாக்டர்கள் துல்லியமாக கண்காணிக்க உதவும். இந்த சொட்டு மருந்துகளை குழந்தைகளுக்கு முறையாக கொடுத்து தாய்மார்கள் ஆரோக்கியமான, அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளை வளர்த்தெடுத்து நாட்டுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, துணை முதல்வர் கலைவாணி, குழந்தைகள் சிகிச்சை பிரிவு தலைவர் அருணாசலம், செவிலியர் பள்ளி முதல்வர் ஞானமுத்து ஜெயந்தி, செவிலியர் கண்காணிப்பாளர்கள் சாந்தகுமாரி, அமுதா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
